Friday 2 March 2012

யோகாவின் அடிப்படை


யோகாவின் அடிப்படை

Post image for யோகாவின் அடிப்படை
யோகா என்றால் பலருக்கு புரிந்தது யோகாசனங்கள் தான். உடலை நீட்டி, வளைத்து செய்யும் ஆசனங்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால் யோகா வெறும் உடற்பயிற்சி ஆசனங்கள் மட்டுமல்ல. ஆசனங்கள் பிராணயாமம் இவை யோகாவின் ஒரு சில அங்கங்கள். உண்மையில் யோகா, ஏட்டுத் தத்துவத்தை விட நடைமுறையில் மனதுக்கும், உடலுக்கும் மருந்தாகும் வழிகளை கூறுகிறது. உடல், மன, இவற்றின் முழு ஆரோக்கியமே யோகாவின் லட்சியம். தவிர ஆன்மீகத்தையும் யோகா போதிக்கிறது.
வடமொழியில் யோகா என்றால் “சங்கமம்” – இறைவனுடன் இணைவது என்று அர்த்தம்.
யோகா ஒரு வாழும் வழி, புலனேந்திரியங்களை கட்டுப்படுத்தி, விருப்பு, வெறுப்பில்லாமல், பற்றன்றி, வாழும் முறைகளை யோகா கற்றுக் கொடுக்கிறது. நாலுவகை நிலைகளை சொல்கிறது. அவை:-
தர்மம்
பிறருக்கும், தனக்கும் செய்ய வேண்டிய கடமைகள், மிதமான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தால் அதுவே சிறந்த தர்மமாகும்.
அர்த்தா
சம்சார வாழ்க்கை, சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுவது. செல்வத்தை சேர்த்து வைப்பது மட்டுமின்றி அதை சரியாக பயன்படுத்துவது.
காமம்
உடலும், உள்ளமும் ஆரோக்கிய நிலையில் இருக்கும் போது வாழ்வின் இன்பங்களை, நேர்மையான முறையில் அனுபவிப்பது.
மோட்சம்
இந்த பிறவியின் சிற்றின்பங்களிலிருந்து விடுபட்டு, பேரின்பமான மோட்ச நிலையை அடைவது.
ஆசனங்களை போதிக்கும் “ஹதயோகம்” மட்டுமின்றி, இறைவனை அடைய நாலு வழிகளையும் யோகா வலியுறுத்துகிறது. அவை.
1. ஞானயோகம்
அடிப்படையில் இந்த யோகம் ஒரு தியானப்பயிற்சி முழுமனதையும் ‘குவித்து’ ஒரு நிலையில் கொண்டு வரும் பயிற்சி ஜபம், தியானமாகும். அறிவு, ஞானம் இவற்றை நாடி ஆன்மீகம் பற்றி தெரிந்து கொண்டு, சுய முன்னேற்றமடைவது ஞானயோகம் இது இறைவனை அடையும் வழிகளில் ஒன்று.
2. பக்தி யோகம்
இறைவனை தவறாது வழிபடுதல், அவன் புகழை அனுதினமும் பாடுதல்,
இறைவனை அன்புடன் நேசித்தல் இவை பக்தியோகத்தின் சாரம். எல்லாவித ஜனங்களுக்கும் ஏற்ற வழிமுறை கடவுள் பக்தி, நம்பிக்கை இவையாகும்.
3. கர்ம யோகம்
பற்றின்றி பணி செய்தல் கர்மயோகமாகும். உழைக்க வேண்டும். வேலை
செய்ய வேண்டும். செயல்பாடுகள் செவ்வனே இருக்க வேண்டும். செய்யும் தொழிலில் ஈடுபாடு செலுத்தி திறமையாக செய்ய வேண்டும். அதே சமயம் பிரதி பலனை எதிர்பாராமல் பணியாற்ற வேண்டும். தனக்கு விதிக்கப்பட்ட பணிகளை விரும்பி செய்பவர், இறைவனை அடைவார்கள், பற்றின்றி செய்பவர்கள் கர்மயோகிகள்.
4. ராஜ யோகம்
உடல், மனதின் யோகா யோகாசனங்களை விவரிக்கும் “ஹதயோம்”
ராஜயோகத்தின் ஒரு அம்சமாகும். ராஜ யோகம் எட்டு ‘கிளைகள்’ உடையது. அதனால் ‘அஷ்டாங்க யோகம்’ எனப்படும். யமம், நியமம், ஆசனங்கள், பிராணாயாமம், பிரதியாஹாரம், தாரணம், தியானம் மற்றும் சமாதி என்று எட்டு நியதிகள் ராஜயோகத்தில் சொல்லப்படுகின்றன. இந்த எட்டு அம்சங்களில் சொல்லப்படுபவை அற்புதமான அறிவுரைகள், அஹிம்சை, உண்மை, திருடாமை, பிரம்மசரியம், பேராசையின்மை, உடல் மன சுத்தம், திருப்தி, எளிய வாழ்க்கை, சுயஞானம், இறை நெறி போன்றவை போதிக்கப்படுகின்றன.
பகவத் கீதையில் யோகா கீழ்க்கணடவாறு வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
1. வெற்றியிலும், தோல்வியிலும், சமநிலை நோக்குடன் இருப்பது யோகா.
2. யோகா என்பது திறமையும், லாவகமும்.
3. விவரிக்க முடியாத ஆனந்தத்தை கொடுப்பது யோகா.
4. அமைதி, சாந்தம் இவை தான் யோகா.
5. வேதனையை அழிப்பது யோகா.
யோகா ஒரு முழுமையான கல்வி முறை. பரமசிவனால்
ஆரம்பிக்கப்பட்டதால்  யோகாவின் ‘பரமகுரு’வாக அவர் கருதப்படுகிறார். பல விதங்களானது யோகா. பக்தியோகம், ஞானயோகம், கர்மயோகம், ராஜயோகம், தியான யோகம், அஷ்டாங்க யோகம், ஹதயோகம், குண்டலினி யோகம், தாந்தீரிய யோகம், நாதயோகம், கிரியாயோகம், லய யோகம், ஜடயோகம் இத்யாதி யோகங்கள் உள்ளன.
பதஞ்சலி முனிவர் யோகக் கலைகளை தொகுத்து ‘யோக சூத்திரங்கள்’ என்று வடிவமைத்தார். அஷ்டாங்க யோகா (எட்டு வகை யோகங்கள்) பதஞ்சலி முனிவரால் ஒழுங்குபடுத்தப்பட்ட லட்சியங்களும், வழிமுறைகளும், யோகாவின் கொள்கைகளாக கருதப்படுகின்றன.
யோகாவின் எட்டு அம்சங்கள்
(அ) பகிரங்க யோகம்
யமம் – யமம் என்றால் கட்டுப்பாடு, செய்யத்தகாதவையை விட்டு விலகி தீயவற்றை எதிர்ப்பது நம் கடன். யமத்தில் ஐந்து வகைகளான நெறிமுறைகள் சொல்லப்படுகின்றன.
யமம் விவரிக்கும் ஐந்து நெறிமுறைகள்
• அஹிம்சை – பிறரை துன்புறுத்தாதது – உடலால் மட்டுமல்ல, மனதாலும் பிறரை துன்புறுத்தக் கூடாது. பிறரை மனதாலும் தவறாக நினைப்பது, நிந்திப்பது கூடாது. பிறருக்கு இன்னா (துன்பம்) செய்யாமை மற்றும் ‘கொல்லாமை’ பற்றி வள்ளுவர் பெருமான் கூறுவது
“சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்”.
பொருள் – ஒருவனுக்குச் சிறப்பு அனைத்தையும் கொடுக்கவல்ல செல்வமாக இருந்தாலும் பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவர் கோட்பாடாகும்.
“எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை”.
பொருள் – எவ்வளவு சிறிதாயினும் எஞ்ஞான்றும் யார்க்கும் எக்காலத்தும் மனத்தினாலும் துன்பம் தரும் செயல்களைச் செய்யாதிருத்தலே சிறப்புடையது ஆகும்.
“அறிவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்”.
பொருள் – அறச்செயல் யாதெனில் ஒர் உயிரையும் கொல்லாது இருத்தல் பிற உயிர்களைக் கொல்லுதல் அறமல்லாத தீவினைப் பயன் அனைத்தையும் தரும். விரோத மனப்பான்மையை தவிர்க்கவும்.
• வாய்மை (சத்தியம்) – உண்மையாகவும் நேர்மையாகவும் நடப்பது. பொய் பேசுவது கூடாது. “வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும் தீமை இல்லாத சொலல்” என்றும், ஒருவனுக்கு புறத்தூய்மை நீரால் ஏற்படும், அதைப்போல அகத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது உண்மை பேசுவதால் ஏற்படும் என்கிறார் வள்ளுவர் பெருமான்.
• ஆஸ்த்தேயம் (திருடாமை) – பிறர் பொருளை திருடாதது பிறரது பொருட்களை மட்டுமல்ல, மற்றவர்களின் எண்ணங்களையும் திருடக்கூடாது. மற்றவரை அவதூறாக பேசுவது கூடாது. அவ்வாறு பேசினால் அவரின் “புகழ்” மற்றும் மதிப்பை திருடியதாக ஆகும். நமக்கு சொந்தமில்லாத பொருளை அபகரித்ததால், அந்த குற்ற உணர்வு நம்மை நிம்மதியாக வாழவிடாது. வள்ளுவர் பெருமான் “பிறருக்கு சொந்தமாக பொருளை மனத்தினால் நினைத்தாலும் தீது” என்கிறார்.
• பிரம்மசர்யம் – ஒருவர் திருமணம் செய்து கொள்ளாமல், இல்வாழ்வில் ஈடுபடாமல் இருப்பதைப்பற்றி இந்த வார்த்தை குறிப்பிடவில்லை. ” பிரும்மம்” எனும் ஞானத்தில் உறைவதை குறிப்பிடுகிறது. அதே சமயம் புலனடக்கம் (பாலியல் உணர்வுகள் தறிகெட்டு போகாமல், தவறான வழிகளில் உடலின் ஜீவ சக்தி விரயம் ஆகாமல்) இருப்பதும் அவசியம். சரியான இல்வாழ்வில் பயன்படுத்தப்படும் பாலியல் சக்தி உடலுக்கு நல்லது. மனதிற்கும் மகிழ்ச்சியை தரும்.
• அபரிக்கிரஹம் – இதை பொருளாசை கூடாது என்று சுருக்கமாக சொல்லலாம். ‘பரிக்கிரஹம்’ என்றால் “ஏற்பது” அதாவது பொருளை சேர்த்துக் கொள்வது அபரிக்கிரஹம் என்றால் பொருட்களை சேர்க்காமை. இந்த அறிவுரை பிரதிபலன்களை எதிர்பார்த்து ‘அன்பளிப்பு’ என்ற பெயரில் வாங்கும் “லஞ்சம்” கூடாது என்கிறது. பேராசை கூடாது. பொருட்களின் மீது பற்றும் கூடாது. யோசித்துப் பாருங்கள், இதை அனைவரும் கடைப்பிடித்தால் உலகில் மகிழ்ச்சியும், சாந்தியும் நிலவும்.
1. நியமம் – ஐந்து வாழும் நெறிமுறைகளை நியமம் சொல்கிறது. அவை
• சௌசம் – தூய்மை அதாவது, உடல் சுத்தம் மட்டுமன்றி மனதளவிலும் தூய்மையாக இருப்பது. முதலில் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மனதில் நல்ல எண்ணங்கள், சிநேகித தன்மை இவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். பொறாமையை தவிர்த்தாலே மனம் அமைதி பெறும். மனமகிழ்ச்சி, கவலையின்மை கைகூடும்.
• மகிழ்ச்சி, சந்தோஷம் – மனதிருப்தி போதுமென்ற மனமே மகிழ்ச்சியை, திருப்தியை தரும். சரி தனத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் கருதலாம். முன்னேறும் முயற்சிகளை விருப்பு வெறுப்பின்றி செய்வதற்கும், வாழ்வின் “மேடு” “பள்ளங்களை” சமாளிக்க, அமைதியான மனம் தேவை. போதுமென்ற சிந்தனை பேராசையை தவிர்க்கிறது. முயற்சியை அல்ல.
• தவம் – சுயக்கட்டுப்பாட்டுடன் செய்யப்படும் விடாமுயற்சி எளிமையான வாழ்க்கை வாழ, தரையில் படுத்துறங்குதல், குளிர்ந்த நீரில் குளித்தல், உணவுக் கட்டுப்பாடு, குளிருக்கும், வெய்யிலுக்கும் உடலை பழக்கப்படுத்துதல் முதலிய நியமங்களை கடைப்பிடிப்பவன் நல்ல யோகியாக மாறமுடியும். இவை தங்களாக கருதப்படும். இவை தவமாக கருதப்படும். மனத்தால் ஐம்புலன்களையும் அடக்கி ஆளவேண்டும்.
• ஸ்வத்யாயம் – நல்ல நூல்களை படித்தல், நடைமுறையில் நல்ல பழக்கங்களை கைவிடாமல் நடப்பது ஸ்வத்யாயம். சுயமுன்னேற்றம் என்றும் கூறலாம். நல்ல ஆன்மீக நூல்களை படிப்பது, நல்லோரின் அறிவுரைகளை கேட்டு நடப்பது என்ற பழக்கங்கள் உங்களிடம் படிந்து விட்டால் போதும், இறைநெறி உங்களை நல்வழியில் நடத்திச் செல்லும்.
• ஈஸ்வர பரணி தானம் (சரணாகதி) – எல்லாம் இறைவனின் செயல் என்ற மனப்பக்குவம் வந்து இறைவனிடம் முழுமையாக புகலடைவது – அதாவது ‘நீயே சரணம்’ என்று இறைவனை சரண்புகுதல். இதற்கு தடையான ‘நான்’ ‘எனது’ என்ற அகம்பாவத்தை விலக்க வேண்டும். இறைவளை சரணாகதி அடைவதை வள்ளுவர் பெருமானும் வலியுறுத்துகிறார்.
“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”.
தம் நெஞ்சத் தாமரை மீது வீற்றிருக்கும் இறைவனுடைய சிறந்த இணையடிகளை இடையறாது நினைக்கின்றவர் நிலமிசை பெருவாழ்வு வாழ்வார்கள்.
“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது”.
தனக்கு நிகரில்லாத இறைவனுடைய இணையடிகளைச் சார்ந்து சிந்தித்திருப்போர்க்குத் தவிர மற்றையவர்க்குத் தீயவினையால் உண்டாகும் மனக்கவலை மாற்றல் என்பது அரிது.
நம்மை விட மேலான சக்தியான கடவுள் நம்மை வழிநடத்துகிறார். நாம் வெறும் கருவி தான். நமது செயல்களின் பயனை கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
2. ஆசனம் – உடலை ஸ்திரமாக வைப்பது. உடலை அமர்த்தும் நிலை. இடுப்பும் தோள்களும் தலையும் நேராக நிறுத்தப்பட வேண்டும். முதுகு தளர்வாக இருக்க வேண்டும். சில யோகாசனங்களை குருவிடம் கற்றுத்தேர்ந்து தினசரி செய்ய வேண்டும்.
3. பிராணாயமம் – மூச்சை அடக்குதல், சுவாச கட்டுப்பாடு.
4. பிரத்யாஹாரம் – மனதை வெளியே செல்ல விடாமல், உள் முகமாகத் திருப்பி விடுதல், மனதை அறிவதற்கான சிந்தனைகள்.
(ஆ) அந்தரங்க யோகம்
5. தாரணை – மனதை ஒரு முகப்படுத்துதல்.  மனதை ஏதாவது ஒரு புறப்பொருளில் குவிப்பது.
6. தியானம் – மனதை அதன் உண்மையான பிறப்பிடம் அல்லது மையத்தில் குவிப்பது.
7. சமாதி – தன்னை அறிவது. உள்ளளி. நம் முயற்சிகள் அனைத்திற்கும் முடிவு.
இந்த எட்டு அம்சங்களின் முதல் ஐந்து ‘பகிரங்க யோகம்’ என்றும் கடைசி
மூன்றும் ‘அந்தரங்க யோகம் என்றும் பதஞ்சலி முனிவர் வகுத்துள்ளார். அந்தரங்க யோகங்களைப் பற்றி மேலும் ‘தியானத்தில்’ சொல்லப்பட்டிருக்கிறது.
யமமும், நியமமும் நம் வாழ்வில் முழுவதும் கடைப்பிடிக்க உகந்தவை.
யோகாவை கடைப்பிடிக்க உணவுகட்டுப்பாடு இன்றியமையாதது. ஆகார நியமமில்லாவிடில் யோகா ப்யாசம் பலன் தராது.
யோகாவின் பிறப்பிடம் இந்தியா. சரித்திர ஆராய்ச்சிகள் 5000 ஆண்டுகளுக்கு முன்பே யோகா நம் நாட்டில் பிரபலமாக இருந்ததாக சொல்கின்றன. மொகஞ்சதாரோ ஹரப்பா நாகரிகத்தில் யோகாசனங்கள் கடைபிடிக்கப்பட்டிருக்கலாம் – இதை அங்கு கிடைத்த குறிப்புகள் குறிப்பிடுகின்றன என்று சரித்திர வல்லுனர்கள் கூறுகின்றனர்.
ஆதிசேஷனின் அவதாரமாக கருதப்படும் பதஞ்சலி முனிவரே யோக சூத்திரங்களை உலகுக்கு அளித்தவர். யோகாவின் முக்கியத்துவம் உடலுக்கும் மனத்துக்கும் தொடர்பு உண்டு என்பது. வேதாந்தம் வேறு, யோகா வேறு, யோகாவுக்கு கடவுள் அத்தியாவசியம் என்று யோகா கூறவில்லை!
எட்டுவகை அஷ்டாங்க யோகத்தை கடைபிடிப்பவர்கள், கடைபிடிக்க முடிந்தவர்கள் பாக்யசாலிகள்! கோபம் தணியும். ஆஸ்துமாவை கட்டுப்படுத்தலாம். அமைதியான உறக்கம் உண்டாகும். செய்யும் செயல்பாடுகள், வேலையில் ஆர்வம் இவையெல்லாம் முன்னேறும். மனவலிமை அதிகரிக்கும்.
அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் யோகா பிரசித்தம் கலிஃபோர்னியாவில் மாத்திரம் நூற்றுக்கணக்கான யோகா மையங்கள் உள்ளன. அனைவரும் உணர வேண்டிய முக்கிய நிபந்தனை – தகுதியான குரு இல்லாமல் யோகாவை செய்யக்கூடாது.

No comments:

Post a Comment